Scroll to top
Upcoming Movies

Thazh Thiravaa

சில படங்கள் ஃபர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர் வரை ஒவ்வொன்றையும் மக்கள் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைத்திருப்பார்கள். அதுவே படத்துக்கு நல்ல ஒப்பனிங்கை எடுத்து வரும். இதற்கு உதாரணமாகப் பல படங்களைக் கூறலாம். அந்த வரிசையில் கண்டிப்பாக இடம்பெறவுள்ள படம் தான் ‘தாழ் திறவா’

தலைப்பு வித்தியாசத்துடன் மட்டும் படக்குழு களமிறங்கவில்லை. வித்தியாசமான கதைக்களம், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என ஒருசேரப் படத்தில் அமைந்துள்ளது. பரணி சேகரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. பர்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இது எந்த மாதிரியான கதைகளம் என்பதையே யூகிக்க முடியாத அளவில் வடிவமைத்துள்ளது படக்குழு.

‘தாழ் திறவா’ படம் குறித்து இயக்குநர் பரணி சேகரனிடம் கேட்ட போது, “இது மர்மங்கள் நிறைந்த திகில் படம். அடுத்த காட்சி என்ன, என்பதை யாராலும் யூகிக்க முடியாத அளவில் இருக்கும். தொல்பொருள் ஆய்வை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காக நிறைய முன் தயாரிப்பு தேவைப்பட்டது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்கள் வரை ஒரு சேர இருப்பது போல் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளேன்.

இதில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ தமிழில் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்துள்ள லிசா என்ற பெண்ணும், லலித் என்ற பையனும் நடித்துள்ளார்கள். இரண்டு குட்டீஸும் கண்டிப்பாக பார்வையாளர்களைக் கவர்வார்கள். படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ். ஒரு சின்ன ஊருக்கும் தொல்பொருள் சோதனை ஒன்று நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரீகம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை.

ஊட்டி, கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதில் சுமார் 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கியமான பங்கு வகிக்கும். இதனை ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கடாரம் கொண்டான்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக பணிபுரிந்த செந்தில் தலைமையில் ‘தாழ் திறவா’ கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு கதைக்கு நல்ல தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைத்துவிட்டால், எதுனாலும் சாத்தியம் தான் என்பார்கள். அந்த வகையில் இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர்களாக சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ், எடிட்டராக மணிகண்டன், கலை இயக்குநராக ராகவா குமார், ஆடை வடிவமைப்பாளராக சுகி, மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் ஆகியோர் கவனித்துக் கொண்டார்கள்.

ஒவ்வொருவருமே தங்களுடைய பணியை ரொம்பவே புரிந்து, ஆத்மார்த்தமாகச் செய்துள்ளனர். கண்டிப்பாக இவர்களுடைய ஒவ்வொருவருடைய பணியுமே உங்களை அசர வைக்கும். இப்போதைக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளோம். விரைவில் அடுத்டுத்த அப்டேட்களுடன் உங்களை ஆச்சரியப்படுத்துவோம் என்பதை உறுதியாகச் சொல்வேன்” என்று தெரிவித்தார்.

Post a Comment

Your email address will not be published. Required fields are marked *