Irandam Kuththu
அனைத்து தொழிலையும் போல, திரைப்படத் துறை படங்கள் தயாரிப்பது லாபம் பார்க்கத் தான். சில படங்கள் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், தயாரிப்பாளர்களுக்கு சொற்ப லாபமே கிடைக்கும். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட சில படங்கள் வசூல் ரீதியில் தோல்வியடைந்ததும் உண்டு.
ஒரு சில படங்கள் விமர்சன ரீதியாக கொண்டாடப்படவில்லை என்றாலும், வசூலைக் கொட்டிக் கொடுத்துள்ளன. இதற்கு உதாரணம் பல படங்களைச் சொல்லலாம். 2018-ம் ஆண்டு வெளியான ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படம் இந்த வகை தான். திரையரங்கில் இளைஞர்கள் கொண்டாடிய இந்தப் படம் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.
இப்போது, இதன் 2-ம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இயக்குநராக மட்டுமன்றி, நாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘இரண்டாம் குத்து’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இளைஞர்களைக் கவர்வதற்காகவே இந்தப் படத்தை ப்ளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஹரி பாஸ்கர் தயாரித்துள்ளார்.
‘இரண்டாம் குத்து’ படத்தின் நாயகிகளாக மீனாள், ஹரிஷ்மா, அக்ரிதி ஆகியோர் நடித்துள்ளனர். ரவி மரியா, சாம்ஸ், பிக் பாஸ் டேனி, டி.எஸ்.கே, ஷாலு ஷமு, லொள்ளு சபா மனோகர், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே ‘இரண்டாம் குத்து’ படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக எஸ்.என்.பிரசாத், எடிச்சராக பிரசன்னா ஜி.கே பணிபுரிந்துள்ளனர்.
இளைஞர்களுக்குக் கொண்டாட்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டது. சென்சார் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், இளைஞர்களைத் திரையரங்கிற்கு அழைத்து வரும் படமாக ‘இரண்டாம் குத்து’ இருக்கும் என்கிறது படக்குழு.