Scroll to top

கூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: ‘சூரரைப் போற்று’ படத்தின் அசாத்திய சாதனை


admin - December 23, 2020 - 0 comments

ஒரு படம் மக்களை எந்தளவுக்குச் சென்று அடைந்துள்ளது என்பதைப் பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். மக்களிடையே அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம், நடிகரின் நடிப்பு ஏற்படுத்திய பிரமிப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் சமூக வலைதளத்தில் எதிரொலிக்கும். மேலும், பலரும் ஒரு படத்தைப் பற்றிப் பேசும் போது “அப்படி என்ன இந்தப் படத்தில் இருக்கும்” என்கிற ஆர்வத்தைப் பார்க்கத் தூண்டும். இப்படி அனைத்து வழிகளிலும் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சுதா கொங்கரா துல்லியமான இயக்கத்தில், சூர்யாவின் பிரமிப்பூட்டும் நடிப்பில், ஜி.வி.பிரகாஷின் சிலிர்ப்பூட்டும் இசையில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. 2டி நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்திருந்தது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 12-ம் தேதி வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்த இந்தப் படத்துக்கு இணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரப்பாண்டியன் பணிபுரிந்திருந்தார். மேலும், 2டி நிறுவனமும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியது.

இந்தப் படம் வெளியான முதலே, திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என அனைவருடைய பாராட்டு மழையிலும் நனைந்தது. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி, இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலருமே படத்தைப் பார்த்துப் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். பலரும் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்யவே, #SooraraiPottru என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் தளத்தில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. 2020-ம் ஆண்டு இந்திய அளவில் அதிகப்படியாக ட்வீட் செய்யப்பட்ட படங்களின் ஹேஷ்டேக்குகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனை ட்விட்டர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த மகுடமாக அமைந்துள்ளது கூகுள் தேடல். 2020-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை அறிவித்துள்ளார்கள். அதிலும் 2-ம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது ‘சூரரைப் போற்று’. இந்த தேடல் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே தென்னிந்தியப் படத்தின் பெயர் ‘சூரரைப் போற்று’ மட்டுமே. மக்கள் மத்தியில் தங்களுடைய கடும் உழைப்பு எந்தளவுக்குப் போய் சென்றுள்ளது என்பதை இந்த 2 சாதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

Related posts

Post a Comment

Your email address will not be published. Required fields are marked *