Scroll to top

சிறந்த பேச்சாளருக்கான சர்வதேச விருதை வென்ற நடிகை பார்வதி நாயர்


admin - September 17, 2021 - 0 comments

சுய முன்னேற்ற பேச்சாளராக மிளிரும் பார்வதி நாயர்

புதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகை பார்வதி நாயர்

‘டோஸ்ட்மாஸ்டர்’ கௌரவத்தை பெற்றிருக்கும் நடிகை பார்வதி நாயர்

நடிகைகள் ஒரு விழாவில் கலந்து கொண்டால், அந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவரிடத்திலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். நடிகையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது முதல், அவருடன் கலந்துரையாடுவது, அந்த விழாவில் அவர் பேசும் பேச்சு, பேச்சு மொழி உள்ளிட்டவைகள் மூலம் அவரின் திரை ஆளுமை தவிர தனித்துவமான திறமைகளும் வெளிப்படும் வாய்ப்பு உண்டாகிறது. இதன் காரணமாக நடிகைகள், நகைக்கடைகள், உணவகங்கள் என வணிக நோக்கம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அத்தகைய விழாக்களில் நடிகைகள் கலந்துகொண்டு பேசும்போது, அவர்களின் பேச்சில் வெளிப்படும் சுவராசியமான தகவல்கள், மேடை ஆளுமை, வருகை தந்திருக்கும் விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் உற்சாகத்தை உண்டாக்கும் உண்டாகும் பேச்சு .. என பல விஷயங்கள் இருக்கிறது.

இந்நிலையில் உலக அளவில் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘டோஸ்ட்மாஸ்டர்’ ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தோம். 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு இயங்கும் இந்த ‘டோஸ்ட்மாஸ்டர்’ தன்னார்வ தொண்டு நிறுவனம் கல்வியியல் துறையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் தலைவர்களையும், தலைமைப் பண்புடன் கூடிய பேச்சாளர்களையும், மனதின் மாசுகளை அகற்றி, வலிமையான உளவியல் உத்திகளுடன் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கான பாணியை எளிதாக விளக்கும் சுயமுன்னேற்ற பேச்சாளர்களையும் உருவாக்கியிருக்கிறது. இவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள கௌரவ விருந்தினராக அழைக்கப்படுவதற்கே ஏராளமான தகுதிகள் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் அனுபவ ஆளுமையுடன் சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கும் திறமையாளர்களையும், சாதனையாளர்களும் மட்டும்தான் இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு கௌரவ விருந்தினர்களாக அல்லது பேச்சாளர்களாகவும் அழைக்கப்படுவர். உதாரணமாக கூற வேண்டுமென்றால் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளை வென்ற சாதனையாளர்களை தான் கௌரவ விருந்தினர்களாக பேசுவதற்கு அழைப்பார்கள். இத்தகைய சாதனையாளர்களும் ‘டோஸ்ட் மாஸ்டரி’ன் உயரிய சர்வதேச தரத்திலான நோக்கத்தை உணர்ந்துகொண்டு மிகுந்த விருப்பத்துடன் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

இதுபோன்றதொரு கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது அங்கு இளைய தலைமுறை மற்றும் இணைய தலைமுறையின் விருப்பத்திற்குரிய நடிகையான பார்வதி நாயர் அவர்களை பேச்சாளராக அழைத்திருந்தார்கள்.

டோஸ்ட்மாஸ்டரின் உறுப்பினர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில் நடிகை பார்வதி நாயரின் அற்புதமான பேச்சு அனைவரின் புருவத்தையும் வியப்பில் உயர்த்தியது. மாடலிங் மங்கையாகவும், விளம்பரங்களில் தோன்றும் வசீகர பெண்ணாகவும் திறமையான நடிகையாகவும் மட்டுமே அறிந்திருந்த பார்வதி நாயர், அன்றைய கூட்டத்தில் பேசிய பேச்சு, அவரின் தனித்திறமையை அடையாளப்படுத்தியது. சரளமான பேச்சு… எளிமையான உதாரணங்கள்… அழுத்தமான நோக்கங்கள்… என ஒரு சுய முன்னேற்ற பேச்சாளருக்குரிய அத்தனை ஆளுமைகளும் இவரின் பேச்சில் இடம்பெற்றிருந்தது. கூட்டத்தை வசியப்படுத்தி வளமான சொல்லாட்சியை இவர் தடையில்லாமல் கைவரப் பெற்றிருந்தார். இவரின் பேச்சு உறுப்பினர்களை ஆச்சரியப்படுத்தியது.

அதன்பிறகுதான் நமக்கெல்லாம் நடிகை பார்வதி நாயர்- பள்ளியில் படிக்கும்போதே மேடைப் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு ஏராளமான விருதுகளை வென்றவர் என்பதும், சுயமுன்னேற்ற பேச்சுக்களை பேசி ஏராளமான தன்னம்பிக்கை நாயகர்களை உருவாக்கியது என்பதும் தெரியவந்தது. விழாவின் இறுதியில் அவருக்கு ‘டோஸ்ட் மாஸ்டர்’ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

கொரோனா காலகட்டத்தில் ஏராளமான திரை உலக பிரபலங்கள் இல்லத்திலேயே முடங்கி, தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தி வந்தபோது, நடிகை பார்வதி நாயர் மட்டும் இத்தகைய பணியுடன் கூடுதலாக மேடைப் பேச்சு திறமையும் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்ததால், இனி அவரை நடிகை என்ற அடையாளத்துடன் மட்டும் சுருக்கி கொள்ளாமல், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உத்வேகத்தை வழங்கும் தன்னம்பிக்கை பேச்சாளராக அடையாளப்படுத்த வேண்டும் என தோன்றியது.

சர்வதேச அளவிலான ‘டோஸ்ட்மாஸ்டர்’ விருதை வென்ற நடிகை பார்வதி நாயருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதனிடையே நடிகை பார்வதி நாயர், சர்வதேச அளவில் பிரமிக்கத்தக்க அளவிலான பேச்சாளர்களையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் டெட்எக்ஸ் (TEDx) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் பேச்சரங்கங்களில், பல முறை கௌரவ பேச்சாளராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டவர் என்பதும், அதில் ஒரு முறை அவர்களின் அழைப்பை ஏற்று, தன்னுடைய சுருக்கமும், வீரியமும், ஆழமும் கொண்ட பேச்சால் அனைவரையும் வியக்கவைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Post a Comment

Your email address will not be published. Required fields are marked *