96 Thanks Giving Meet
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து வெளியான திரைப்படம் 96. ஒளிப்பதிவாளராக இருந்த பிரேம்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, பக்ஸ்,ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இவ்விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார், ஒளிப்பதிவாளர்கள் சண்முக சுந்தரம், மகேந்திரன் தேவராஜ். நியாத்தி கடாம்பி, ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷிணி, ஆடுகளம் முருகதாஸ், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, கலை இயக்குநர் வினோத் ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்தராஜ், உடை வடிவமைப்பாளர் சுபஸ்ரீகார்த்திக் விஜய், ஒலி வடிவமைப்பாளர் அழகிய கூத்தன், பாடலாசிரியர் கவிஞர் உமாதேவி,பாடகி சின்மயி, நடிகர் சூர்யா, கௌதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில்,‘எனக்கு தொழில்முறையான வாழ்க்கை, சொந்த வாழ்க்கை என வாழ்க்கை இரண்டாக பிரித்து வைத்து வாழ்ந்ததில்லை. எனக்கு இரண்டும் ஒன்றாக கலந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு சினிமா தான் வாழ்க்கை. இந்த படத்தின் பணியாற்றிய பெரும்பாலானவர்கள் எனக்கு நண்பர்கள். நண்பர்களுக்கு நன்றி சொல்லக்கூடாது என்பார்கள். அதனால் நன்றி தெரிவிக்கபோவதில்லை.
ஊடகவியலாளர்களுக்கும் நன்றி சொல்லப் போவதில்லை. ஏனெனில் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் வெற்றிக்கு உங்களின் வழிகாட்டல் தான் காரணம். அதனால் தான் ஒரு மாதம் கழித்து வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அன்று முதல் நீங்களும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க இயலாத உறவாகிவிட்டீர்கள். நான் நன்றி சொல்ல விரும்புவது படத்தில் இடம்பெறுவது போல் இயற்கைக்கு மட்டும் தான் நன்றி சொல்லவிருக்கிறேன். இந்த படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளிலிருந்து விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் லலித்குமார் என்ற இரண்டு நண்பர்கள் தான் காப்பாற்றினார்கள். இதையும் கடந்து இந்த படத்தின் அடையளமாக இருப்பவர்கள் விஜய் சேதுபதியும், திரிஷாவும் தான். இவர்கள் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள்.’ என்றார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்,‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது. விமர்சனம், திரைப்படம், மக்கள் ரசனை, பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்த படம்.
நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள். சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாக தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன்.
அதை அளவுக்கோலாக வைத்து தான் இதனை பேசுகிறேன்.
இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறைச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது. இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம். அதற்காக இவ்விசயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்தவிரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம். வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயரமுடியும். என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது.’ என்றார்.